Wednesday, 4 March 2009

உயிர் தப்பிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

முதல் கட்டமாக கடந்த ஜனவரியில் நடந்த ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கை அணி வென்றது. அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதின. கராச்சியில் நடந்த முதல் டெஸ்ட் "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் லாகூரில் நடந்தது.
நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடக்க இருந்தது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை வீரர்கள் சொகுசு பஸ்சில் போட்டி நடக்கும் கடாபி மைதானத்துக்கு காலையில் வந்தனர்.மக்கள் நெரிசல் மிகுந்த "லாகூர் லிபர்டி மார்க்கெட்' அருகே பஸ் வந்த போது, முகமூடி அணிந்த 12 பேர் அடங்கிய பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக நாலாபுறமிருந்தும் சுடத் துவங்கியது; குண்டுகள் பறந்தன. முதலில் பஸ்சின் டயரை குறி வைத்து சுட்டுள்ளனர். பின் கையெறி குண்டை வீசினர். இது பஸ்சின் மீது விழாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து "ஏ.கே. 47' ரக துப்பாக்கி மூலம் பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கின. வீரர்களின் பாதுகாப்புக்காக பயணித்த போலீசார் திருப்பிச் சுட்டனர். ஆனால், கடும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், ஆறு போலீசார் பலியாயினர். பஸ் அருகே சென்று கொண்டிருந்த அப்பாவி மக்கள் இரண்டு பேர் பலியாயினர்.
அசம்பாவிதத்தை மேலும் தடுக்க, துரிதகதியில் செயல்பட்ட பஸ் டிரைவர், பஸ்சை வேகமாக செலுத்தி, அனைவரையும் பாதுகாப்பதில் மும்முரமானார்.இலங்கை வீரர்கள் மீது குண்டுகள் பாய்ந்தன. இலங்கை கேப்டன் ஜெயவர்தனே, சமரவீரா, மெண்டிஸ், பரனவிதனா, துஷாரா, வாஸ், அம்பயர் அஹ்சன் ராஜா உள்ளிட்ட எட்டு பேர் காயமடைந்தனர்.வெடிகுண்டுத் துகள்கள் தான், வீரர்கள் சிலர் காயமடைய காரணமாக அமைந்தது. இவர்களுக்கு உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து இலங்கை கேப்டன் ஜெயவர்தனே கூறுகையில்,""தாக்குதல் நடத்தப்படுவதை உணர்ந்து நாங்கள் அனைவரும் கீழே படுத்துக் கொண்டோம். வீரர்களுக்கு லேசான காயம் தான் ஏற்பட்டது,'' என்றார்.பாகிஸ்தானில் நடந்த இந்த கொடூரத் தாக்குதல், கடந்த ஆண்டு இறுதியில் மும்பையில் நடந்த பயங்கரத் தாக்குதலை நினைவூட்டும் விதமாக அமைந்திருந்தது.முதல் முறையாக: இத்தாக்குதலை தொடர்ந்து இலங்கை அணி டெஸ்ட் தொடரை ரத்து செய்துவிட்டு நாடு திரும்புகிறது. கிரிக்கெட் வீரர்கள் மீது முதல் முறையாக நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் கவலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment